Saturday, August 15, 2015

வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

ஒரு வீட்டில் உள்ள பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் உள்ளன. இதோ அந்தக் குறிப்புகள். வீட்டில் பூஜை அறையை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்க வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தால் அந்த வீட்டின் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும். 

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணங்கும் போது கடவுளின் படங்கள் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வடகிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென் - கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். 

முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் மறைந்த நமது முன்னோர்களின் புகைப்படங்களை ஒரு போதும் வைக்கக் கூடாது. பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கும் தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதண்டு. 

அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர மற்ற ரேநங்களில் அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரியில் பூஜை அறை அமைக்கக்கூடாது. 

அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்கவேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்கவேண்டும். பூஜை அறையை எக்காரணம் கொண்டும் மாடிப்படிகளின் கீழ் அமைக்கக்கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நல்ல எண்ண அலைகளை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன்வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

வீட்டில் தினமும் விளக்கேற்றுங்கள்

வீட்டில் தினமும் விளக்கேற்றுங்கள்

வீட்டில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பழக்கம் வீட்டை லட்சுமி கடாட்சமாக திகழ செய்யும்.  வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை பெற்றோர் தினமும் விளக்கு ஏற்றும்படி சொல்ல வேண்டும். இதனால் பெண் குழந்தைகளின் முகபொலிவும் கூடும் அதிகாலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ எனப்படும் ஆதி அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்ற வேண்டும். 

இந்த வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம். விளக்கு ஏற்றுவதற்கான விதிமுறைகள் வருமாறு:- 

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ? 

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். 

நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன்-மனைவி உறவு நலம் பெற வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. குல தெய்வத்தின் முழு அருளை பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.  நல்லெண்ணை தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. 

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட விரும்புபவர்கள் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். 

சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம். கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. அடுத்து எந்த திசை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

கிழக்கு- திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு- திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும். தெற்கு திசை நோக்கி ஒரு போதும் தீபம் ஏற்றக்கூடாது.

தனியாக இலுப்பெண்ணெய் தீபம் வேண்டாம்

தனியாக இலுப்பெண்ணெய் தீபம் வேண்டாம்

இலுப்பெண்ணெய் ஊற்றி சிவன் ஆலயத்தில் தீபம் ஏற்றினால், சிவன் அருளால் கடன் தொல்லை நீங்கும், சுகவாழ்வு அமையும், இலுப்பெண்ணெய் ஈசனுக்கு உகந்தது ஆகும். எனவே, இலுப்பெண்ணெய் மட்டும் தனியாக ஊற்றி வீடுகளில் கண்டிப்பாகத் தீபம் ஏற்றக்கூடாது. தேங்காய் எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றினால் விநாயகர் அருளால் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். 

தேங்காய் எண்ணெய் தீபம் அர்த்த நாரீஸ்வரர் கோவில் மற்றும் விநாயகர் கோவில் ஆகியவற்றில் ஏற்ற சிறப்பான பலன்கள் ஏற்படும். பசு நெய் + இலுப்பெண்ணெய் + வேப்பஎண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து தீபம் ஏற்றினால் எல்லாவிதமான நன்மைகளும் ஏற்பட்டு, செல்வம் பெருகி, நிறைவான வாழ்க்கை அமையும்.

மிகவும் சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்

மிகவும் சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்

நமது புராதன மந்திரங்களில் மிகவும் நேர்த்தியானதும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான மந்திரம் காயத்ரி மந்திரம் தான். விவரிக்க முடியாத அளவிற்கு அதற்குள் சக்தி அடங்கியுள்ளது. நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மீக சக்தியைத் தட்டி எழுப்பக்கூடிய மந்திரமே காயத்ரி மந்திரம். 

காயத்ரி மந்திரப் பொருள். 'நம்முடைய புத்திகளை நல்லனவற்றைப் பற்றி நிற்குமாறு தூண்டுகின்ற (சூர்ய மண்டலத்தில் உள்ள) ஒளிமயமான பகவானுடைய மங்கள ஸ்வரூபத்தை உபாசிக்கின்றேன். ஜபம் செய்யும் போது மேற்கூறிய பொருளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவரவர்களுடைய சக்தி - நேரம் இவைகளுக்கு ஏற்றவாறு 1008, 108, 28 - முறைகள் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மனதுக்குள்ளேயே மனனம் செய்து ஜபிப்பது ஒரு வகை. 

முணு முணுத்து ஜபிப்பது இரண்டாம் வகை. பிறர் காதில்படும் படி உயர்ந்த குரலில் ஜபிப்பது மூன்றாம் வகை. உயர்ந்த குரலில் ஜபிப்பதை விட முணு முணுத்து ஜபிப்பது நூறுமடங்கு சிறந்தது. முணு முணுப்பை விட மனத்தளவில் ஜபிப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது. காயத்ரி ஜபம் செய்யும் போது இரண்டு உள்ளங்கை களையும் சிறிது வளைந்து முகத்துக்கு நேராக உயர்ந்து இருக்க வேண்டும். விரல்கள் சேர்ந்திருக்கக் கூடாது. 

ஜபகாலத்தில் காயத்ரியை எண்ணும் போது சுண்டு விரலின் அடிப்பாகத்தில் உள்ள கணுவிலிருந்து பிரதக்சினமாக மோதிரவிரலின் அடிப்பாகத்திலுள்ள கணுவரை எண்ண வேண்டும். இப்படி எண்ணினால் பத்து எண்களாகும். அக்சமாலை முதலியவற்றைக் கொண்டு எண்ணக் கூடாது ஓம், பூர்புவஸ்ஸூவ: தத்ஸவி துர்வ ரேணியம், பர்க்கோ தேவஸ்யதீமஹி, தியோ யோ ந: பிரசோதயாத் என்று ஐந்து பகுதிகளாக நிறுத்தி ஜபிக்க வேண்டும். தூணிலோ சுவரிலோ சாய்ந்திராமல் நேராக உட்கார்ந்து ஜபிக்க வேண்டும். 

இரண்டு கைகளையும் வஸ்திரத்தினால் மூடிக் கொண்டு ஜபிக்க வேண்டும். பூஜை அறையில் இறைவனுக்கு முன் உட்கார்ந்து உச்சரிப்பது மிகச் சிறந்தது. இந்த மந்திரத்தைச் சொல்வதால், உயிர் வலிமை பெறும், உடலில் சக்தி அதிகமாகும். பகைவர்களை வெல்லும் திறமை ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். உள்ளம் தூய்மை அடையும் உள்ளுள் இருக்கும் ஆன்ம ஒளி, காயத்ரியை ஜபிப்பவன் முகத்தில் ஞானஒளியாக மலரும். 

நீண்ட ஆயுளும், காலத்தைக் கையாளும் திறனும் ஏற்படும். காயத்ரி மந்திரம் உலகத்துக்கே பொதுவானது. இது பரம்பொருளை தியானிக்கச் சொல்கிறது. எந்தக் கடவுளையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனவே நாடு, மொழி, இனம், மதம், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரும் இதனை ஜபிக்கலாம். காயத்ரி மந்திரங்கள் கொண்ட சிறு, சிறு புத்தகங்கள் உள்ளது. அவற்றை வாங்கி பூஜை அறையில் வைத்து படிக்கலாம்.

திருமணப் பொருத்தம் அவசியமா?

திருமணப் பொருத்தம் அவசியமா?

நீங்கள் ராட்சச கணமா? இல்லை மனித கணமா? மொத்த நட்சத்திரங்கள் 27 ஆகும். அதை 9 நட்சத்திரங்களுக்கு ஒரு 'கணம்' என்ற அடிப்படையில் மூன்று பகுதியாக முன்னோர்கள் பிரித்திருக்கிறார்கள். தேவ கணங்களாக ஒன்பது நட்சத்திரங்களையும், மனித கணங்களாக ஒன்பது நட்சத்திரங்களையும், ராட்சச கணங்களாக ஒன்பது நட்சத்திரங்களையும் மனிதர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். 

இந்த மூன்று பிரிவில் எந்த கணத்தை, எந்த கணத்தோடு சேர்த்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். அதற்கு 'கணப்பொருத்தம்' என்று அழைப்பது வழக்கம். அந்த கணப்பொருத்தம்தான் குணப்பொருத்தம் என்பது. விவாகத்தில் தொடங்கிய வாழ்க்கை, விவகாரம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானாலும், விவாகரத்து ஏற்படாமல் இருக்க வேண்டுமானாலும் கணப்பொருத்தம்தான் அவசியமாகும். 

தேவ கணத்தைச் சேர்ந்த ஆணிற்கு, மனித கணத்தைச் சேர்ந்த பெண் பொருத்தமற்றது என்பார்கள். அதே போல ராட்சச கணத்தை சார்ந்த பெண்ணிற்கு மனித கணத்தைச் சார்ந்த ஆண் பொருத்தமற்றது என்பார்கள். தம்பதியர் இருவருக்கும் ராசி அதிபதிகள் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரின் ராசி அதிபதிகளும் நட்பு கிரகமாக இருந்தாலும் பெண் ராட்சச கணம் சேர்க்கலாம் என்பர். ஒற்றுமையும், மங்கலமும் தரும் கணப்பொருத்த விவரம்! 

தேவகணம் - மனித கணம் - ராட்சச கணம் 

அசுவினி - பரணி - கார்த்திகை 
மிருகசீரிஷம் - ரோகிணி - ஆயில்யம் 
புனர்பூசம் - திருவாதிரை - மகம் 
பூசம் - பூரம் - சித்திரை 
ஹஸ்தம் - உத்திரம் - விசாகம் 
சுவாதி பூராடம் - கேட்டை 
அனுஷம் - உத்திராடம் - மூலம் 
திருவோணம் - பூரட்டாதி - அவிட்டம் 
ரேவதி - உத்திரட்டாதி - சதயம் 

வரன்கள் ஜாதகத்தில், 'தசாபுத்தி சந்திப்பு' இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். ஏதேனும் தோஷங்கள் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.செவ்வாய் தோஷம், சனி தோஷம் சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அவற்றைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமானால் அதைப் பின்பற்றலாம். இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக மற்ற பொருத்தங்களையும் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்தையும் வைத்துப் பார்த்து தசாபுத்தியறிந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தால் முத்தான வாழ்க்கை மலரும். 

முன்னேற்றம் கிடைக்கும். பத்துப்பொருத்தங்கள் எவை எவை? 

1. தினம், 
2. கணம், 
3. மகேந்திரம், 
4. ஸ்தீரி தீர்க்கம், 
5. யோனி, 
6. ராசி, 
7. ராசி அதிபதி, 
8. வசியம், 
9. ரஜ்ஜூ, 
10. வேதை

வெற்றியை வழங்கும் நெற்றித் திலகம்

வெற்றியை வழங்கும் நெற்றித் திலகம்

சில சடங்கு சம்பிரதாயங்கள் நம் உடலுக்கும், மனதிற்கும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. பரமேஸ்வரனுக்கு 'நெற்றிக்கண்' உண்டு என்று புராணங்கள் சொல்கின்றன. ஆனால் பக்தர்களுக்கு ஆன்மிகத்தின் சின்னமாகக் கருதப்படும் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் திலகமிட்டுக் கொள்வது வழக்கம். 

விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும் பொழுது இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது என்று சொல்கிறார்கள். அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும்பொழுது ஜலதோஷம் ஏற்படலாம். கபாலத்தில் (நெற்றியில்) நீர் கட்டிக் கொள்ளும். இதைப்போக்க திருநீறு அணிகின்றோம். சந்தனம், குங்குமம் இவற்றைப் புருவ மத்தியில் வைக்கும் பொழுது அதன் குளிர்ச்சி உடலில் சேர்ந்து ஆரோக்கியத்தைச் சீராக்குகிறது. துளசி, வில்வம் சேர்ந்த தீர்த்தங்களைக் கோவிலில் கொடுப்பார்கள். 

துளசி தீர்த்தம் கபம், இருமல், சளி போன்றவற்றை நீக்கும் ஆற்றல் பெற்றது. வில்வ தீர்த்தம் குளிர்ச்சியானது. நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகைகளை ஆலயங்களில் தீர்த்தத்துடன் கலந்து கொடுத்தனர் நம் முன்னோர்கள். கோவிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் அங்கு தரும் பிரசாதங்கள், தீர்த்தங்களின் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வழிவகை செய்வதோடு, இறைவனை வழிபடும் பொழுது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்று முன்னோர்கள் நம்பினர். பிரகாரம் சுற்றுவதில் கூட கால்களுக்கு வலிமை ஏற்படுகின்றது. 

கோவிலை 3 முறை, 5 முறை, 9 முறை, 51 முறை, 108 முறை என்று பிரகாரம் சுற்றுவர். சுற்றும் பொழுது இறை நாமம் உச்சரிக்க வேண்டும். இதனால் தியானமும் உருவாகின்றது. உடலில் தேங்கிய ரத்தமும் சீராகின்றது. குழந்தைகளுக்கு காது குத்திக் கடுக்கண் போடும் பொழுது கூட விஞ்ஞான உண்மை விளங்குகிறது. நூற்றுக்கணக்கான நரம்புகள் பின்னிப் பிணைந்து இருக்கும் இடம் காது. அதைக் கீழ்நோக்கி இழுத்து தோப்புக் கரணம் போடுகின்ற பொழுது மூளைக்கு ரத்தம் பம்பு செய்யப்பட்டு சிந்தனை ஆற்றலை உருவாக்குகிறது. 

மறதியைப் போக்குகிறது. இதை வெளிநாட்டில் தலைசிறந்த யோகாவாகக் கருதுகின்றனர். காது குத்திக் கடுக்கண் இடும்பொழுது, மூளை செயல்பாட்டில் பலம் கூடுவதாகக் கண்டறிந்தனர். காதுகுத்து விழாவாக முன்னோர்கள் ஏற்படுத்தி உறவைப்பலப்படுத்த மாமன் மடியில் வைத்து காது குத்துவது வழக்கம். படியேறிப் படியேறி மலைக் கோவில்களுக்குச் சென்று தெய்வ தரிசனங்களைச் செய்யும் பொழுது முழங்கால் மூட்டுக்கள் வலிமை அடைகின்றன. 

பாதரட்சை அணியாமல் கோவிலில் பிரகாரம் வரும்பொழுது ரத்த ஓட்டம் சீராகின்றது. அன்று வழிபாட்டில் செய்த பிரகாரத்தைத்தான் இன்று 'வாக்கிங்' என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆலய தரிசனத்தால் அகத்திற்கும், புறத்திற்கும் நற்பலன் கிடைக்கின்றது. நெற்றித் திருநீறும், நீங்காத குங்குமமும் சிறிய அளவில் வைத்துக் கொண்டாலும் பெரிய அளவில் பலன் தரும். நெற்றியில் வைத்துக் கொள்ளும் சந்தனத்தை மொட்டை அடித்துக் கொள்பவர்கள் தலையில் பூசிக் கொள்வர். 

இதனால் மூளை கொதிப்படையாமல் தடுக்கப்படுகின்றது. குளிர்ச்சி அதிகரிக்கும். அதே சந்தனத்தை இடுப்பிற்கு கீழே பூசக்கூடாது. இனவிருத்தி உறுப்புகளில் படும்பொழுது இன விருத்தித் திறன் பாதிக்கும் என்று தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது உடலும் உள்ளமும் சீராகின்றது. அதே சமயம் இல்லத்திலும் திருநீற்றுப் பச்சை, துளசி, வில்வம், அருகம்புல், தூதுவளை, கரிசலாங்கன்னி, வேம்பு போன்ற தெய்வீக மூலிகைத் தாவரங்களை வளர்க்கலாம். 

அவற்றின் பயனறிந்து நாம் உபயோகப்படுத்தினால் உடல் ஆரோக்கியம் சீராகும் அல்லவா? மேலும் துளசி மாதாவை விளக்கேற்றி வழிபட்டால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வேம்பு தெய்வீக மரம். இதன் இலை, பூ ஆகியவற்றை முறைப்படி பக்குவம் அறிந்தவர்களிடம் கேட்டு உபயோகித்தால் உடல் நலம் சீராகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாழ்வில் சுறுசுறுப்போடு வாழ தூண்டுகோலாய் அமையும்.

பிள்ளையார் பிடித்தல்

பிள்ளையார் பிடித்தல்

* மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். 

* சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். 

* விபூதியில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் நோய்கள் தீரும். 

* குங்குமத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும். 

* வெண்ணெயில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், கடன் தொல்லை அகலும். 

* வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், உடலில் ஏற்படும் கட்டிகள் கரையும்.