Saturday, August 15, 2015

கோபத்தை கட்டுப்படுத்த துறவியின் விளக்கம்

கோபத்தை கட்டுப்படுத்த துறவியின் விளக்கம்

அந்தத் துறவியிடம் ஏராளமான இளைஞர்கள் சீடர்களாக இருந்தனர். துறவியைப் பார்ப்பதற்காக பலரும், பல ஊர்களில் இருந்து வருவதுண்டு. சில சமயங்களில் புனிதப் பயணமான துறவியுடன் கூட தன் சீடர்களுடன் பயணப்படுவதுண்டு. அவ்வாறு பயணிக்கும்போது, ஒரு சிலர் அவரை தகாத வார்த்தைகளால் அவமதிப்பதும் உண்டு. 

ஆனால் எத்தகைய அவமதிப்பாக இருந்தாலும், துறவியின் முகம் சற்றும் வாட்டம் காணாது, எப்போதும் போலவே ஒளிமிகுந்து பிரகாசித்தபடி இருக்கும். அவரை அந்த அவமதிப்பு ஒருபோதும் பாதித்ததே இல்லை. இது அவரிடம் சீடனாக இருந்த ஒரு இளைஞனுக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி.. அவருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் கோபம் வந்தே தீர வேண்டும். 

ஆனால் துறவியோ வெளியிடத்திலும் சரி.. தன் சீடர்களிடமும் சரி அவர் எப்போதும் கோபம் கொண்டது இல்லை. அந்த ரகசியத்தை அறிய சீடர் விரும்பினான். அவரிடம் இதுபற்றி கேட்கவும் செய்தான். ‘சீடனே! நான் கோபம் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அதை உனக்கு கூறுகிறேன். ஒரு முறை நான் ஏரியில் படகு ஒன்றில் தனியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தேன். அப்போது நான் அமர்ந்திருந்த படகின் மீது யாரோ மோதுவது போல் தோன்றியது. 

இதனால் எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. கண் விழித்து பார்த்தபோது, என் எதிரில் வெற்றுப் படகு ஒன்று நின்றது. காற்றின் திசையில் இழுத்துவரப்பட்ட அந்தப் படகுதான், நான் அமர்ந்திருந்த படகின் மீது மோதி என் தவத்தை கலைத்திருக்கிறது. என்னுடைய கோபத்தை இப்போது யாரிடம் காட்டுவது?.. வெற்றுப் படகிடம் என் கோபத்தைக் காட்டினால் என்னைவிட மூடன் எவனாவது இருப்பானா?.. என்னை யார், எப்போது அவமதித்தாலும் நான் அந்த வெற்றுப் படகையே நினைத்துக் கொள்வேன். என்ன, ஏதென்று அறியாதவர்கள் செய்யும் செயலுக்காக அவர்களின் மீது கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது. அவர்களும் வெற்றுப் படகைப் போன்றவர்களே என்று நினைத்து அமைதியாக இருந்து விடுவேன்’ என்றார். துறவியின் பதிலால் சீடன் உற்சாகமானான். தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த வழி கிடைத்து விட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்தான்.

No comments:

Post a Comment