Saturday, August 15, 2015

பழிச்சொல் பற்றி துறவியின் கருத்து

பழிச்சொல் பற்றி துறவியின் கருத்து

ஒரு கிராமத்தின் எல்லைப்பகுதியில் துறவி ஒருவர் குடில் அமைத்து தங்கியிருந்தார். அவர் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நடக்க வேண்டிய நல்வழிகள் பற்றி எடுத்துக்கூறுவார். மேலும் இறைவனை நம்புங்கள். அவன் உங்களுக்கு நல்வாழ்வை அமைத்து தருவான் என்றும் அறிவுறுத்துவார். 

அந்தப் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவன், துறவியின் ஒழுக்கம் பற்றி அவதூறான விஷயங்களை பரப்பினான். சிலர் அதை நம்பவும் செய்தார்கள். காலங்கள் கடந்தன. அந்த இளைஞனுக்கு பல கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அவனால் அந்த துன்பங்களை கடந்து செல்ல முடியவில்லை. 

துறவியைப் பற்றி தான் பரப்பிய அவதூறுதான், இவ்வாறு தன்னை எதிர்த்துத் தாக்குவதாக அவன் எண்ணினான். இதனால் அந்த துறவியிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். துறவி, இளைஞனைப் பார்த்து கூறினார். ‘நான் சொல்கிறபடி செய். வீட்டுக்குச் சென்று, ஒரு தலையணையை எடுத்துக் கொள். 

அதை கிழித்து, அதனுள் இருக்கும் பஞ்சை ஊரின் நடுவில் நின்று நாலாபுறமும் பறக்கவிடு. பிறகு என்னிடம் வா!’ என்று கூறினார். துறவி சொன்னதை அப்படியே செய்து விட்டு, அவரிடம் வந்தான் இளைஞன். ‘சுவாமி! நீங்கள் கூறிய படியே பஞ்சைக் காற்றில் பறக்க விட்டு விட்டேன். அடுத்து வேறென்ன செய்ய வேண்டும்’ என்றான். ‘சரி.. நீ பறக்க விட்ட பஞ்சு முழுவதையும் ஒன்றாக்கி என்னிடம் எடுத்து வா!’ என்றார் துறவி. திகைத்துப் போனான் இளைஞன். இப்போது துறவி அமைதியாக கூறினார். 

‘தம்பி! காற்றில் பறந்த பஞ்சைப் போலவே, யாரையும் பழி சொல்வது எளிதான விஷயம். அந்த பழி நாலாபுறமும் பறந்து பலரையும் சென்றடைந்து விடும். ஆனால் அதை மீண்டும் சரி செய்து நல்ல எண்ணத்தை உருவாக்குவது என்பது, பறக்க விட்ட பஞ்சை ஒன்றாக சேகரிப்பதற்கு சமமானது. அது இயலாத காரியம். எப்போது நீ செய்த தவறை உணர்ந்து விட்டாயே, அப்போதே நீ மன்னிக்கப்பட்டு விட்டாய். இனியாவது யாருக்கும் தீங்கு செய்யாது வாழ கற்றுக்கொள்’ என்று கூறி அவனை அனுப்பினார்.

No comments:

Post a Comment