Saturday, August 15, 2015

வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்?

ஒரு வீட்டில் உள்ள பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் உள்ளன. இதோ அந்தக் குறிப்புகள். வீட்டில் பூஜை அறையை வட கிழக்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்க வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தால் அந்த வீட்டின் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும். 

பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணங்கும் போது கடவுளின் படங்கள் கிழக்குப் பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம். பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வடகிழக்கு மூலையில் ஒரு பித்தளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும். தென் - கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும். 

முக்கியமாக கவனிக்க வேண்டியது, பூஜை அறையில் மறைந்த நமது முன்னோர்களின் புகைப்படங்களை ஒரு போதும் வைக்கக் கூடாது. பூஜை அறையை குப்பைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும். பூஜை அறையை வழிபடுவதற்கும் தியானம் செய்வதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடப்பற்றாக்குறை காரணமாக படுக்கை அறை அல்லது சமையல் அறை சுவர்களில் உள்ள அலமாரிகளை பூஜை அறையாக பயன்படுத்துவதண்டு. 

அப்படி இருந்தால் வழிபடும் நேரம் தவிர மற்ற ரேநங்களில் அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் துணித்திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப்பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழிபடுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக்கலாம். கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரியில் பூஜை அறை அமைக்கக்கூடாது. 

அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்கவேண்டும். அவை வெளிப்புறமாக திறக்கும்படி இருக்கவேண்டும். பூஜை அறையை எக்காரணம் கொண்டும் மாடிப்படிகளின் கீழ் அமைக்கக்கூடாது. பூஜை அறையில் மந்திர உச்சாடனங்களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நல்ல எண்ண அலைகளை கொண்டு வரும். அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன்வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

வீட்டில் தினமும் விளக்கேற்றுங்கள்

வீட்டில் தினமும் விளக்கேற்றுங்கள்

வீட்டில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பழக்கம் வீட்டை லட்சுமி கடாட்சமாக திகழ செய்யும்.  வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை பெற்றோர் தினமும் விளக்கு ஏற்றும்படி சொல்ல வேண்டும். இதனால் பெண் குழந்தைகளின் முகபொலிவும் கூடும் அதிகாலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ எனப்படும் ஆதி அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்ற வேண்டும். 

இந்த வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம். விளக்கு ஏற்றுவதற்கான விதிமுறைகள் வருமாறு:- 

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ? 

நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும். விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். 

நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன்-மனைவி உறவு நலம் பெற வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. குல தெய்வத்தின் முழு அருளை பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.  நல்லெண்ணை தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. 

மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட விரும்புபவர்கள் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். 

சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம். கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. அடுத்து எந்த திசை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். 

கிழக்கு- திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு- திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும். வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும். தெற்கு திசை நோக்கி ஒரு போதும் தீபம் ஏற்றக்கூடாது.

தனியாக இலுப்பெண்ணெய் தீபம் வேண்டாம்

தனியாக இலுப்பெண்ணெய் தீபம் வேண்டாம்

இலுப்பெண்ணெய் ஊற்றி சிவன் ஆலயத்தில் தீபம் ஏற்றினால், சிவன் அருளால் கடன் தொல்லை நீங்கும், சுகவாழ்வு அமையும், இலுப்பெண்ணெய் ஈசனுக்கு உகந்தது ஆகும். எனவே, இலுப்பெண்ணெய் மட்டும் தனியாக ஊற்றி வீடுகளில் கண்டிப்பாகத் தீபம் ஏற்றக்கூடாது. தேங்காய் எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றினால் விநாயகர் அருளால் குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். 

தேங்காய் எண்ணெய் தீபம் அர்த்த நாரீஸ்வரர் கோவில் மற்றும் விநாயகர் கோவில் ஆகியவற்றில் ஏற்ற சிறப்பான பலன்கள் ஏற்படும். பசு நெய் + இலுப்பெண்ணெய் + வேப்பஎண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து தீபம் ஏற்றினால் எல்லாவிதமான நன்மைகளும் ஏற்பட்டு, செல்வம் பெருகி, நிறைவான வாழ்க்கை அமையும்.

மிகவும் சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்

மிகவும் சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்

நமது புராதன மந்திரங்களில் மிகவும் நேர்த்தியானதும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான மந்திரம் காயத்ரி மந்திரம் தான். விவரிக்க முடியாத அளவிற்கு அதற்குள் சக்தி அடங்கியுள்ளது. நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மீக சக்தியைத் தட்டி எழுப்பக்கூடிய மந்திரமே காயத்ரி மந்திரம். 

காயத்ரி மந்திரப் பொருள். 'நம்முடைய புத்திகளை நல்லனவற்றைப் பற்றி நிற்குமாறு தூண்டுகின்ற (சூர்ய மண்டலத்தில் உள்ள) ஒளிமயமான பகவானுடைய மங்கள ஸ்வரூபத்தை உபாசிக்கின்றேன். ஜபம் செய்யும் போது மேற்கூறிய பொருளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவரவர்களுடைய சக்தி - நேரம் இவைகளுக்கு ஏற்றவாறு 1008, 108, 28 - முறைகள் காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மனதுக்குள்ளேயே மனனம் செய்து ஜபிப்பது ஒரு வகை. 

முணு முணுத்து ஜபிப்பது இரண்டாம் வகை. பிறர் காதில்படும் படி உயர்ந்த குரலில் ஜபிப்பது மூன்றாம் வகை. உயர்ந்த குரலில் ஜபிப்பதை விட முணு முணுத்து ஜபிப்பது நூறுமடங்கு சிறந்தது. முணு முணுப்பை விட மனத்தளவில் ஜபிப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது. காயத்ரி ஜபம் செய்யும் போது இரண்டு உள்ளங்கை களையும் சிறிது வளைந்து முகத்துக்கு நேராக உயர்ந்து இருக்க வேண்டும். விரல்கள் சேர்ந்திருக்கக் கூடாது. 

ஜபகாலத்தில் காயத்ரியை எண்ணும் போது சுண்டு விரலின் அடிப்பாகத்தில் உள்ள கணுவிலிருந்து பிரதக்சினமாக மோதிரவிரலின் அடிப்பாகத்திலுள்ள கணுவரை எண்ண வேண்டும். இப்படி எண்ணினால் பத்து எண்களாகும். அக்சமாலை முதலியவற்றைக் கொண்டு எண்ணக் கூடாது ஓம், பூர்புவஸ்ஸூவ: தத்ஸவி துர்வ ரேணியம், பர்க்கோ தேவஸ்யதீமஹி, தியோ யோ ந: பிரசோதயாத் என்று ஐந்து பகுதிகளாக நிறுத்தி ஜபிக்க வேண்டும். தூணிலோ சுவரிலோ சாய்ந்திராமல் நேராக உட்கார்ந்து ஜபிக்க வேண்டும். 

இரண்டு கைகளையும் வஸ்திரத்தினால் மூடிக் கொண்டு ஜபிக்க வேண்டும். பூஜை அறையில் இறைவனுக்கு முன் உட்கார்ந்து உச்சரிப்பது மிகச் சிறந்தது. இந்த மந்திரத்தைச் சொல்வதால், உயிர் வலிமை பெறும், உடலில் சக்தி அதிகமாகும். பகைவர்களை வெல்லும் திறமை ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். உள்ளம் தூய்மை அடையும் உள்ளுள் இருக்கும் ஆன்ம ஒளி, காயத்ரியை ஜபிப்பவன் முகத்தில் ஞானஒளியாக மலரும். 

நீண்ட ஆயுளும், காலத்தைக் கையாளும் திறனும் ஏற்படும். காயத்ரி மந்திரம் உலகத்துக்கே பொதுவானது. இது பரம்பொருளை தியானிக்கச் சொல்கிறது. எந்தக் கடவுளையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனவே நாடு, மொழி, இனம், மதம், ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லாரும் இதனை ஜபிக்கலாம். காயத்ரி மந்திரங்கள் கொண்ட சிறு, சிறு புத்தகங்கள் உள்ளது. அவற்றை வாங்கி பூஜை அறையில் வைத்து படிக்கலாம்.

திருமணப் பொருத்தம் அவசியமா?

திருமணப் பொருத்தம் அவசியமா?

நீங்கள் ராட்சச கணமா? இல்லை மனித கணமா? மொத்த நட்சத்திரங்கள் 27 ஆகும். அதை 9 நட்சத்திரங்களுக்கு ஒரு 'கணம்' என்ற அடிப்படையில் மூன்று பகுதியாக முன்னோர்கள் பிரித்திருக்கிறார்கள். தேவ கணங்களாக ஒன்பது நட்சத்திரங்களையும், மனித கணங்களாக ஒன்பது நட்சத்திரங்களையும், ராட்சச கணங்களாக ஒன்பது நட்சத்திரங்களையும் மனிதர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். 

இந்த மூன்று பிரிவில் எந்த கணத்தை, எந்த கணத்தோடு சேர்த்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும் என்பதையும் குறிப்பிடுகிறார்கள். அதற்கு 'கணப்பொருத்தம்' என்று அழைப்பது வழக்கம். அந்த கணப்பொருத்தம்தான் குணப்பொருத்தம் என்பது. விவாகத்தில் தொடங்கிய வாழ்க்கை, விவகாரம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானாலும், விவாகரத்து ஏற்படாமல் இருக்க வேண்டுமானாலும் கணப்பொருத்தம்தான் அவசியமாகும். 

தேவ கணத்தைச் சேர்ந்த ஆணிற்கு, மனித கணத்தைச் சேர்ந்த பெண் பொருத்தமற்றது என்பார்கள். அதே போல ராட்சச கணத்தை சார்ந்த பெண்ணிற்கு மனித கணத்தைச் சார்ந்த ஆண் பொருத்தமற்றது என்பார்கள். தம்பதியர் இருவருக்கும் ராசி அதிபதிகள் ஒன்றாக இருந்தாலும் அல்லது இருவரின் ராசி அதிபதிகளும் நட்பு கிரகமாக இருந்தாலும் பெண் ராட்சச கணம் சேர்க்கலாம் என்பர். ஒற்றுமையும், மங்கலமும் தரும் கணப்பொருத்த விவரம்! 

தேவகணம் - மனித கணம் - ராட்சச கணம் 

அசுவினி - பரணி - கார்த்திகை 
மிருகசீரிஷம் - ரோகிணி - ஆயில்யம் 
புனர்பூசம் - திருவாதிரை - மகம் 
பூசம் - பூரம் - சித்திரை 
ஹஸ்தம் - உத்திரம் - விசாகம் 
சுவாதி பூராடம் - கேட்டை 
அனுஷம் - உத்திராடம் - மூலம் 
திருவோணம் - பூரட்டாதி - அவிட்டம் 
ரேவதி - உத்திரட்டாதி - சதயம் 

வரன்கள் ஜாதகத்தில், 'தசாபுத்தி சந்திப்பு' இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். ஏதேனும் தோஷங்கள் உள்ளதா? என்று பார்க்க வேண்டும்.செவ்வாய் தோஷம், சனி தோஷம் சர்ப்ப தோஷம் மற்றும் கிரக தோஷங்கள் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். அவற்றைப் பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்ய முடியுமானால் அதைப் பின்பற்றலாம். இந்தப் பத்துப் பொருத்தங்கள் நீங்கலாக மற்ற பொருத்தங்களையும் தம்பதியர்கள் இருவருடைய ஜாதகத்தையும் வைத்துப் பார்த்து தசாபுத்தியறிந்து பிறகு திருமணம் செய்ய முடிவு செய்தால் முத்தான வாழ்க்கை மலரும். 

முன்னேற்றம் கிடைக்கும். பத்துப்பொருத்தங்கள் எவை எவை? 

1. தினம், 
2. கணம், 
3. மகேந்திரம், 
4. ஸ்தீரி தீர்க்கம், 
5. யோனி, 
6. ராசி, 
7. ராசி அதிபதி, 
8. வசியம், 
9. ரஜ்ஜூ, 
10. வேதை

வெற்றியை வழங்கும் நெற்றித் திலகம்

வெற்றியை வழங்கும் நெற்றித் திலகம்

சில சடங்கு சம்பிரதாயங்கள் நம் உடலுக்கும், மனதிற்கும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. பரமேஸ்வரனுக்கு 'நெற்றிக்கண்' உண்டு என்று புராணங்கள் சொல்கின்றன. ஆனால் பக்தர்களுக்கு ஆன்மிகத்தின் சின்னமாகக் கருதப்படும் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் திலகமிட்டுக் கொள்வது வழக்கம். 

விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும் பொழுது இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது என்று சொல்கிறார்கள். அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும்பொழுது ஜலதோஷம் ஏற்படலாம். கபாலத்தில் (நெற்றியில்) நீர் கட்டிக் கொள்ளும். இதைப்போக்க திருநீறு அணிகின்றோம். சந்தனம், குங்குமம் இவற்றைப் புருவ மத்தியில் வைக்கும் பொழுது அதன் குளிர்ச்சி உடலில் சேர்ந்து ஆரோக்கியத்தைச் சீராக்குகிறது. துளசி, வில்வம் சேர்ந்த தீர்த்தங்களைக் கோவிலில் கொடுப்பார்கள். 

துளசி தீர்த்தம் கபம், இருமல், சளி போன்றவற்றை நீக்கும் ஆற்றல் பெற்றது. வில்வ தீர்த்தம் குளிர்ச்சியானது. நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகைகளை ஆலயங்களில் தீர்த்தத்துடன் கலந்து கொடுத்தனர் நம் முன்னோர்கள். கோவிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் அங்கு தரும் பிரசாதங்கள், தீர்த்தங்களின் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வழிவகை செய்வதோடு, இறைவனை வழிபடும் பொழுது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்று முன்னோர்கள் நம்பினர். பிரகாரம் சுற்றுவதில் கூட கால்களுக்கு வலிமை ஏற்படுகின்றது. 

கோவிலை 3 முறை, 5 முறை, 9 முறை, 51 முறை, 108 முறை என்று பிரகாரம் சுற்றுவர். சுற்றும் பொழுது இறை நாமம் உச்சரிக்க வேண்டும். இதனால் தியானமும் உருவாகின்றது. உடலில் தேங்கிய ரத்தமும் சீராகின்றது. குழந்தைகளுக்கு காது குத்திக் கடுக்கண் போடும் பொழுது கூட விஞ்ஞான உண்மை விளங்குகிறது. நூற்றுக்கணக்கான நரம்புகள் பின்னிப் பிணைந்து இருக்கும் இடம் காது. அதைக் கீழ்நோக்கி இழுத்து தோப்புக் கரணம் போடுகின்ற பொழுது மூளைக்கு ரத்தம் பம்பு செய்யப்பட்டு சிந்தனை ஆற்றலை உருவாக்குகிறது. 

மறதியைப் போக்குகிறது. இதை வெளிநாட்டில் தலைசிறந்த யோகாவாகக் கருதுகின்றனர். காது குத்திக் கடுக்கண் இடும்பொழுது, மூளை செயல்பாட்டில் பலம் கூடுவதாகக் கண்டறிந்தனர். காதுகுத்து விழாவாக முன்னோர்கள் ஏற்படுத்தி உறவைப்பலப்படுத்த மாமன் மடியில் வைத்து காது குத்துவது வழக்கம். படியேறிப் படியேறி மலைக் கோவில்களுக்குச் சென்று தெய்வ தரிசனங்களைச் செய்யும் பொழுது முழங்கால் மூட்டுக்கள் வலிமை அடைகின்றன. 

பாதரட்சை அணியாமல் கோவிலில் பிரகாரம் வரும்பொழுது ரத்த ஓட்டம் சீராகின்றது. அன்று வழிபாட்டில் செய்த பிரகாரத்தைத்தான் இன்று 'வாக்கிங்' என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆலய தரிசனத்தால் அகத்திற்கும், புறத்திற்கும் நற்பலன் கிடைக்கின்றது. நெற்றித் திருநீறும், நீங்காத குங்குமமும் சிறிய அளவில் வைத்துக் கொண்டாலும் பெரிய அளவில் பலன் தரும். நெற்றியில் வைத்துக் கொள்ளும் சந்தனத்தை மொட்டை அடித்துக் கொள்பவர்கள் தலையில் பூசிக் கொள்வர். 

இதனால் மூளை கொதிப்படையாமல் தடுக்கப்படுகின்றது. குளிர்ச்சி அதிகரிக்கும். அதே சந்தனத்தை இடுப்பிற்கு கீழே பூசக்கூடாது. இனவிருத்தி உறுப்புகளில் படும்பொழுது இன விருத்தித் திறன் பாதிக்கும் என்று தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது உடலும் உள்ளமும் சீராகின்றது. அதே சமயம் இல்லத்திலும் திருநீற்றுப் பச்சை, துளசி, வில்வம், அருகம்புல், தூதுவளை, கரிசலாங்கன்னி, வேம்பு போன்ற தெய்வீக மூலிகைத் தாவரங்களை வளர்க்கலாம். 

அவற்றின் பயனறிந்து நாம் உபயோகப்படுத்தினால் உடல் ஆரோக்கியம் சீராகும் அல்லவா? மேலும் துளசி மாதாவை விளக்கேற்றி வழிபட்டால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வேம்பு தெய்வீக மரம். இதன் இலை, பூ ஆகியவற்றை முறைப்படி பக்குவம் அறிந்தவர்களிடம் கேட்டு உபயோகித்தால் உடல் நலம் சீராகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாழ்வில் சுறுசுறுப்போடு வாழ தூண்டுகோலாய் அமையும்.

பிள்ளையார் பிடித்தல்

பிள்ளையார் பிடித்தல்

* மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும். 

* சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். 

* விபூதியில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் நோய்கள் தீரும். 

* குங்குமத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும். 

* வெண்ணெயில் பிள்ளையார் பிடித்து வழிபாடு செய்தால், கடன் தொல்லை அகலும். 

* வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வழிபட்டால், உடலில் ஏற்படும் கட்டிகள் கரையும்.

தவ பலன்களை தரும் தேரோட்ட தரிசனம்

தவ பலன்களை தரும் தேரோட்ட தரிசனம்

கோவிலில் கருவறையில் மூலவரை நன்கு அலங்காரம் செய்து, சிறப்பான நைவேத்தியம் படைத்து நறுமணப்பொருட்களால் தீப - தூப ஆராதனைகள் நடத்தப்படும் போது, நாம் நம்மையே மறைந்து இறைவனை வழிபடுவோம். கருவறை சூழல் நம்மை இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும். இந்த புண்ணியமும், பாக்கியமும் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. நிறைய பேர் பல்வேறு காரணங்களால் அடிக்கடி ஆலயத்துக்கு செல்வதில்லை. 

சிலர் நோய் வாய்பட்டு இருப்பார்கள். சிலர் முதுமை காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பார்கள். இப்படிப்பட்டவர்களும் தன்னை வழிபட வேண்டும், தனது அருள் பார்வை அவர்கள் மீது பட வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் உற்சவராக தேரில் அமர்ந்து வீதிகளில் உலா வருகிறார். உற்சவர் விக்கிரகங்கள் 99 சதவீதம் உலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த விக்கிரகங்கள் கருவறை மூலவரிடம் உள்ள அதிர்வலைகளை உள்வாங்கிக் கொள்ளும் சக்தி படைத்தவை. 

எனவே இந்த சக்தியுடன் வீதி உலா வரும் உற்சவர்கள், கருவறை மூலவர் தரும் அத்தனை பலன்களையும் பக்தர்களுக்கு அள்ளிக் கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தேரோட்டம் நடைபெறும் போது தவிர்க்காமல் தரிசனம் செய்யுங்கள். கடுமையாக தவம் செய்பவர்கள் மீது கடவுள் இரக்கப்பட்டு, விரும்பி வேண்டி கேட்கும் வரத்தை எல்லாம் எப்படி கொடுத்து விடுவாரோ... அது போல தேரோட்டத்தை கண்டு வழிபட்டால், தவம் இருப்பவர்கள் பெறுவதற்கு சமமான பலன்களைப் பெறலாம். 

பண்டை காலத் தில் தேரோட்டம் 15 நாள், 20 நாள் வரை கூட நடக்குமாம். எனவே இதை தேர்த் திருவிழா என்றனர். தேருக்கு ரதம் என்றும் ஒரு பொருள் உண்டு. இதை அடிப்படையாகக் கொண்டு ’ரதோத் சவம்‘ என்றும் சொல்கிறார்கள். சவம் என்றால் ’வெளி வருதல்‘ என்று பொருள். (குழந்தை பிறப்பை பிரசவம் என்பார்கள்) கடவுள் ரதத்தில் வெளியில் வருவதால் ரதோத்சவம் என்கி றார்கள். ரதத்தை செலுத்த சாரதி தேவை. ஜீவாத்மாவாகிய நம்மைச் சாரதியாக இருந்து பரமாத்மா வழிநடத்துகிறார் என்பதை தேரோட்டம் உணர்த்துகிறது. 

மூலவர் இருக் கும் ஆலயம் நகராது. ஆனால் உற்சவர் இருக்கும் தேர் நகரக் கூடியது. எனவே தேரை ’நகரும் கோவில்‘ என்று ஆகமங்களில் குறிப்பிட்டுள்ளனர். கிராமங்களில் தேரோட்டம் நடை பெறும் போது முக்கிய இடங்களில் நிறுத்தி உற்சவருக்கு தீபாரதனை காட்டு வார்கள். அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் வந்து தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். இது ஒவ்வொரு தெருவிலும் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த மனநிறைவை கொடுக்கும். 

அது மட்டுமின்றி சாமியே நம் வீட்டுக்கு வந்து விட்டு செல்கிறது என்று மக்கள் மனம் குதூகலம் அடையும். இந்த மகிழ்ச்சி தேரோட்ட நாளில் மட்டுமே கிடைக்கும். இத்தகைய சிறப்புடைய தேரோட்டம் நடப்பது சங்க காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. அந்த காலத்தில் அரசர்கள் தங்களது போர்ப்படைகளாக தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என 4 விதமான படைகளை வைத்திருந்தனர். இதில் தேர்ப்படை முதல் இடத்தை வகித்தது. 

ஏனெனில் போரில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி படைத்ததாக தேர்ப்படை இருந்தது. எனவே அரசர்கள் நகர் வலம் வரும்போது தேரில் வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். ஆலயங்கள் தோன்றிய போது கடவுளையும் தேரில் வைத்து உலா வரும் நடைமுறை உருவானது. பிறகு அதுவே தேர்த் திருவிழாவாக மாறியது என்பார்கள். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அந்த காலத்தில் தேர்கள் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. 

தேர்களில் நெடுந்தேர், பொன்தேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர் அணிகொள்தேர் என்று பல வகைகள் உள்ளன. தேர்கள் பொதுவாக இலுப்பை, வேங்கை, சந்தனம் ஆகிய மரங்களில்தான் செய்யப்படும். ஏனெனில் எண்ணைப் பசைத்தன்மை கொண்ட இந்த மரங்களில் விரிசல் ஏற்பட்டாலும் பிறகு அவை ஒன்று சேர்ந்து விடும் என்பதால் இவைதான் தேர்களுக்கு தேர்வு செய்யப்பட்டன. கோவில் தேர்களை செய்வதற்கு என்று விதிமுறைகள் உள்ளன. 

இது பற்றி மானசாரம், விட்டுணு தத்துவ சம்கிருதை ஆகிய நூல்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு தேரை செய்து முடிக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள். பெரும்பாலும் தேரின் அமைப்பானது கோவில் கருவறை விமானம் போலவே இருக்கும். சதுரம், அறுகோணம், பதின் கோணம், பன்னிரண்டு கோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் ஆகிய 9 வடிவங்களில் அமைக்கப்படும். 

தேரின் மூன்று பகுதிகளிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும் கடவுள் உருவங்கள் தவிர சிங்கம், யானை, முதலை, நாகம், அரசர்கள் உருவம் இடம் பெற்றிருக்கும். பெரும்பாலும் அந்தந்த ஆலய தல வரலாறுடன் தொடர்புடைய சிற்ப வேலைபாடுகள் தேரில் இடம்பெற்றிருக்கும். விழா நாட்களில் இந்த தேர்கள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வரும். சில கோவில்களில் பிரமாண்டமான தேர்கள் நிரந்தரமான அலங்காரத்துடன் இருக்கும். அந்த வகையில் தமிழ் நாட்டின் மிகப்பெரிய தேராக திருவாரூர் தேர் உள்ளது.

நான்கு யானை உயரத்துடன் இருக்கும் அந்த தேரை ஆழித்தேர் என்று அழைக்கிறார்கள். இந்த தேர் முழுமையாக அலங்கரிக்கப்படும் போது 96 அடி உயரம் வரை இருக்குமாம். 4 நிலைகளைக் கொண்ட இந்த தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது. தேரின் எடை 220 டன்களாகும். அந்த காலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்தால் தான் இந்த தேர் வீதியுலா வர முடியுமாம். தற்போது திருச்சி பெல் நிறுவனத்தினர் எளிதாக உருளும் சக்கரம், ஹைட்ராலிக் பிரேக் உள்பட பல நவீன சாதனங்களை பொருத்தி இருப்பதால் 3 ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்து ஒரே நாளில் தேர் திருவிழாவை நடத்தி முடித்து விடுகிறார்கள். 

அந்த காலத்தில் தேரை ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து வடம் பிடித்து இழுக்க வேண்டும் என்ற பழக்கத்தை வைத்திருந்தனர். இதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரும், ஏழை - பணக்காரன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் திரண்டு ஒன்று கூடி ஒரு வேலையை செய்யும் பொறுப்பு உருவாக்கப்பட்டது. இது அனைத்து தரப்பினரிடமும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. எனவே தேர்த் திருவிழாவை நம் முன்னோர்கள் சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் விழாவாகவும் பார்த்தனர். 

இறைவனின் ஐந்தொழிலில் தேர்த் திருவிழா அழித்தல் தொழிலை குறிக்கிறது. திருவதிகையில் வீற்றி ருக்கும் சிவபெருமான் முப்புரங்களையும் எரித்து தேவர்களை காப்பாற்ற தேரில் ஏறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை தலத்தில்தான் தமிழ்நாட்டின் முதல் தேரோட்டம் நடந்ததாக புராணங்களிலும், கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்த்திருவிழாவுக் காகவே பல கோவில் களுக்கு தனியாக சொத்துக்கள் இருந்தன. 

இத்தகைய சிறப்புடைய தேர்களுக்கு மலர்த் தோரணங்கள், திரைச் சீலைகள், குஞ்சங்கள் அமைத்து அலங்கரிக்கும் போது மிக அழகாக இருக்கும். அவை அசைந்து, அசைந்து வரும்போது மனம் குதூகலத்துக்கு மாறி விடும். தேர்கள் 4 ரத வீதிகளையும் சுற்றி வரும்போது நீர்மோர், பானகம், தண்ணீர் போன்றவற்றை தானம் செய்வார்கள். இந்த தானம் வம்சத்தை செழிப்புடன் விரிவடைய செய்யும் என்பது ஐதீகம். சில ஆலயங்களில் தேருக்கு முன்பு கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், கும்மி கோலாட்டம் போன்றவை நடப்பதுண்டு. 

சில ஊர்களில் தேருக்கு பின்னால் அடியார்கள் திருமுறைகளை பாடி கொண்டு வருவார்கள். இது ஆலய விழாக்களுக்கு தனிச் சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆதி தமிழர்கள் உருவாக்கிய தேர்களில் எதுவும் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. இப்போதுள்ள தேர்கள் விஜய நகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டவையாகும். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆலயங்களில் 866 மிகப்பழமையான தேர்களே உள்ளன. 

ஆண்டுக்கு ஓரிரு முறையே வீதியுலா வரும் இந்த தேர்கள் நன்கு பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக தேர் செய்ய மிகப்பெரும் செலவு ஆகிறது என்பதால் யாரும் தேர் செய்வதில்லை. எனவே நமது பொக்கிஷமாக ஆலய தேர்கள் மாறி உள்ளன. இந்த தேர்களை போற்றி, பேணி பாதுகாத்து வருங்கால தலைமுறையினரும் வழிபட வைக்க வேண்டியது நமது கடமையாகும். இந்த தேர்கள், வாகனங்கள் எல்லாம் ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா நாட்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் பிரம்மோற்சவத்துக்கு என்று தனிச் சிறப்பும், மகிமையும் உள்ளது. 

ஆடிமாதத்தில் திருமணம் செய்யாதது ஏன்?

ஆடிமாதத்தில் திருமணம் செய்யாதது ஏன்?

பொதுவாக திருமணம், புதுமனைபுகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் என கூறப்படுவது உண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்து செல்லும் மாதம். பீடு நிறைந்த மாதம். மக்கள் மனபீடத்தில் இறைவனை நிலைநிறுத்துகிற மாதம். 

அதனால் தெய்வ சிந்தனையில் இருப்பதால் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. ஆடிமாதத்தில் திருமணம் நடைபெற்றால் 10 மாதம் கழித்து சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும் போது வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். 

இதனால் தான் ஆடிமாதத்தில் திருமணம் செய்வதையும், கணவன்–மனைவி கூடி இருப்பதையும் தவிர்த்தனர். மேலும் ஆடிமாதத்தில் தெற்கு திசையில் பூமி நகரும் போது விஞ்ஞான ரீதியாக நில அதிர்வுகளும், கடல்சீற்றமும் ஏற்படும். அதிக காற்றுவீசும். பலத்த மழை பெய்யும். அதனால் மனையடி கோலம், கிரக பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.

கடவுளின் உதவி

கடவுளின் உதவி

கடவுளின் மீது நம்பிக்கை கொண்ட விவசாயி ஒருவன் இருந்தான். அவனது இறை நம்பிக்கை எப்படிப்பட்டது என்றால், எந்த துன்பம் வந்தாலும் இறைவன் காப்பாற்றுவார் என்பதுதான். தன் துன்பத்திற்கான காரணம் என்ன? அதை நம்மால் சரி செய்ய முடியுமா என்பது பற்றியெல்லாம், அந்த விவசாயி ஒருபோதும் சிந்தித்துப் பார்த்தது இல்லை. 

எப்போதும் இறைவன் மீதே தன் பாரத்தை இறக்கி வைப்பவனாக இருந்தான். ஒரு நாள் தனது தோட்டத்தில் விளைந்த பொருட்களை எல்லாம், மூட்டைகளாக கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு, பக்கத்து ஊரில் நடந்து கொண்டிருந்த சந்தைக்கு சென்று கொண்டிருந்தான் அந்த விவசாயி. வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தான். முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக கிடந்தன. 

தண்ணீர் தேங்கிக் கிடந்த பெரும் பள்ளத்தில், விவசாயி ஓட்டி வந்த மாட்டு வண்டியின் சக்கரங்கள் சிக்கி புதைந்து கொண்டன. மாட்டினால் வண்டியை அந்த பள்ளத்தில் இருந்து இழுக்க முடியவில்லை. உடனே விவசாயி, ‘கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்!’ என்று மனமுருக வேண்டினான். கடவுள் வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாவது முறை என தொடர்ச்சியாக பலமுறை இறைவனை வேண்டியும், அவர் வருவதாக தெரியவில்லை. வனப்பகுதி என்பதால் உதவிக்கும் யாரும் இல்லாமல் விவசாயி தவித்துப் போனான். 

இறுதியாக வண்டியில் இருந்து இறங்கியவன், பள்ளத்தில் புதைந்திருந்த சக்கரத்தை தானே தூக்கி நகர்த்த முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்! தன்னால் தனியாக சாதிக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, சக்கரம் பள்ளத்தில் இருந்து எளிதாக வெளியே வந்தது. எதேச்சையாக வண்டியின் பின் பக்கம் திரும்பி பார்த்தான் விவசாயி. அப்போது தான் அவனுக்கு, தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன், சக்கரத்தை தூக்குவதில் உதவி செய்தது தெரியவந்தது. 

அந்த வழிப்போக்கனை வணங்கியவன், ‘மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீங்கள் செய்து விட்டீர்கள்’ என்றான். ‘கடவுளே! உதவி செய்!’ என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார். நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி புரிவார். அதற்கு நீதான் அவருக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும்’ என்று கூறிவிட்டு, வழிப்போக்கன் தன் வழியே நடக்கத் தொடங்கினான்.

கோபத்தை கட்டுப்படுத்த துறவியின் விளக்கம்

கோபத்தை கட்டுப்படுத்த துறவியின் விளக்கம்

அந்தத் துறவியிடம் ஏராளமான இளைஞர்கள் சீடர்களாக இருந்தனர். துறவியைப் பார்ப்பதற்காக பலரும், பல ஊர்களில் இருந்து வருவதுண்டு. சில சமயங்களில் புனிதப் பயணமான துறவியுடன் கூட தன் சீடர்களுடன் பயணப்படுவதுண்டு. அவ்வாறு பயணிக்கும்போது, ஒரு சிலர் அவரை தகாத வார்த்தைகளால் அவமதிப்பதும் உண்டு. 

ஆனால் எத்தகைய அவமதிப்பாக இருந்தாலும், துறவியின் முகம் சற்றும் வாட்டம் காணாது, எப்போதும் போலவே ஒளிமிகுந்து பிரகாசித்தபடி இருக்கும். அவரை அந்த அவமதிப்பு ஒருபோதும் பாதித்ததே இல்லை. இது அவரிடம் சீடனாக இருந்த ஒரு இளைஞனுக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி.. அவருக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் கோபம் வந்தே தீர வேண்டும். 

ஆனால் துறவியோ வெளியிடத்திலும் சரி.. தன் சீடர்களிடமும் சரி அவர் எப்போதும் கோபம் கொண்டது இல்லை. அந்த ரகசியத்தை அறிய சீடர் விரும்பினான். அவரிடம் இதுபற்றி கேட்கவும் செய்தான். ‘சீடனே! நான் கோபம் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இருக்கிறது. அதை உனக்கு கூறுகிறேன். ஒரு முறை நான் ஏரியில் படகு ஒன்றில் தனியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தேன். அப்போது நான் அமர்ந்திருந்த படகின் மீது யாரோ மோதுவது போல் தோன்றியது. 

இதனால் எனக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. கண் விழித்து பார்த்தபோது, என் எதிரில் வெற்றுப் படகு ஒன்று நின்றது. காற்றின் திசையில் இழுத்துவரப்பட்ட அந்தப் படகுதான், நான் அமர்ந்திருந்த படகின் மீது மோதி என் தவத்தை கலைத்திருக்கிறது. என்னுடைய கோபத்தை இப்போது யாரிடம் காட்டுவது?.. வெற்றுப் படகிடம் என் கோபத்தைக் காட்டினால் என்னைவிட மூடன் எவனாவது இருப்பானா?.. என்னை யார், எப்போது அவமதித்தாலும் நான் அந்த வெற்றுப் படகையே நினைத்துக் கொள்வேன். என்ன, ஏதென்று அறியாதவர்கள் செய்யும் செயலுக்காக அவர்களின் மீது கோபப்பட்டு என்ன ஆகப் போகிறது. அவர்களும் வெற்றுப் படகைப் போன்றவர்களே என்று நினைத்து அமைதியாக இருந்து விடுவேன்’ என்றார். துறவியின் பதிலால் சீடன் உற்சாகமானான். தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த வழி கிடைத்து விட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்தான்.

ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை

ஸ்ரீ காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் முறை

காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார். காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள். 

இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும். 

இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில்  காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. 

மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும். 

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும். தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

பழிச்சொல் பற்றி துறவியின் கருத்து

பழிச்சொல் பற்றி துறவியின் கருத்து

ஒரு கிராமத்தின் எல்லைப்பகுதியில் துறவி ஒருவர் குடில் அமைத்து தங்கியிருந்தார். அவர் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நடக்க வேண்டிய நல்வழிகள் பற்றி எடுத்துக்கூறுவார். மேலும் இறைவனை நம்புங்கள். அவன் உங்களுக்கு நல்வாழ்வை அமைத்து தருவான் என்றும் அறிவுறுத்துவார். 

அந்தப் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவன், துறவியின் ஒழுக்கம் பற்றி அவதூறான விஷயங்களை பரப்பினான். சிலர் அதை நம்பவும் செய்தார்கள். காலங்கள் கடந்தன. அந்த இளைஞனுக்கு பல கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அவனால் அந்த துன்பங்களை கடந்து செல்ல முடியவில்லை. 

துறவியைப் பற்றி தான் பரப்பிய அவதூறுதான், இவ்வாறு தன்னை எதிர்த்துத் தாக்குவதாக அவன் எண்ணினான். இதனால் அந்த துறவியிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். துறவி, இளைஞனைப் பார்த்து கூறினார். ‘நான் சொல்கிறபடி செய். வீட்டுக்குச் சென்று, ஒரு தலையணையை எடுத்துக் கொள். 

அதை கிழித்து, அதனுள் இருக்கும் பஞ்சை ஊரின் நடுவில் நின்று நாலாபுறமும் பறக்கவிடு. பிறகு என்னிடம் வா!’ என்று கூறினார். துறவி சொன்னதை அப்படியே செய்து விட்டு, அவரிடம் வந்தான் இளைஞன். ‘சுவாமி! நீங்கள் கூறிய படியே பஞ்சைக் காற்றில் பறக்க விட்டு விட்டேன். அடுத்து வேறென்ன செய்ய வேண்டும்’ என்றான். ‘சரி.. நீ பறக்க விட்ட பஞ்சு முழுவதையும் ஒன்றாக்கி என்னிடம் எடுத்து வா!’ என்றார் துறவி. திகைத்துப் போனான் இளைஞன். இப்போது துறவி அமைதியாக கூறினார். 

‘தம்பி! காற்றில் பறந்த பஞ்சைப் போலவே, யாரையும் பழி சொல்வது எளிதான விஷயம். அந்த பழி நாலாபுறமும் பறந்து பலரையும் சென்றடைந்து விடும். ஆனால் அதை மீண்டும் சரி செய்து நல்ல எண்ணத்தை உருவாக்குவது என்பது, பறக்க விட்ட பஞ்சை ஒன்றாக சேகரிப்பதற்கு சமமானது. அது இயலாத காரியம். எப்போது நீ செய்த தவறை உணர்ந்து விட்டாயே, அப்போதே நீ மன்னிக்கப்பட்டு விட்டாய். இனியாவது யாருக்கும் தீங்கு செய்யாது வாழ கற்றுக்கொள்’ என்று கூறி அவனை அனுப்பினார்.

மறுபிறவி எடுத்தால் தர்ப்பணம் என்பது பலன் கொடுக்குமா?

மறுபிறவி எடுத்தால் தர்ப்பணம் என்பது பலன் கொடுக்குமா?

அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது நம் முன்னோர்களில் ஒருவர் மட்டுமல்ல பல தலைமுறைகளில் உள்ளவர்களும் இருப்பர். நம் முன்னோர்களில் பலர் தான் செய்த பாவத்துக்கேற்ப மறுபிறவி எடுக்க முடியாமல் கூட இருப்பர்.


சிலர் வேறு உயிரினமாகவோ, மனிதனாகவோ பிறந்தாலும் அவர்களின் ஆன்மா என்பது ஒன்றுதான். உங்களின் முன்னோர்கள் உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் வடிவிலோ ஏதாவது உயிரினங்கள் வடிவிலோ கூட உங்களோடு பழகும் தன்மையை பெறுவார்கள், அவர்களால் உதவி ஏற்படும். நீங்கள் செய்யும் தர்ப்பனமானது.

இருள் உலகத்தில் பாவப்பட்டு கிடக்கும் உங்கள் முன்னோர்களின் பாவங்களை சிறிது சிறிதாக கரைத்து அவர்களுக்கு நல்ல பிறவி கிடைக்க செய்யும்.  அவர்கள் மறுபிறவி எடுத்தாலும் அவர்களின் உதவி ஏதாவது ஒரு வகையில் வந்து சேர செய்யும்.

உதாரணமாக நேற்று நீங்கள் பழகிய நண்பர் பல நாள் பழகியது போல நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் பல லட்சம் கூட உதவி செய்யலாம். அவ்வாறு உதவி செய்பவர் உங்களில் முன்னோர்களில் ஒருவராகவும் இருக்கலாம்.

நீங்கள் செய்யும் தர்ப்பணம் முன்னோர்களுக்கு மட்டுமே என்று அது எந்த வகையிலும் வீண்போகாது என்று உணர்ந்து செயல்படுங்கள். 

தர்ப்பணத்தின் பலனாகத்தான் மறுபிறவியே அவர்களுக்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.