Saturday, August 15, 2015

தவ பலன்களை தரும் தேரோட்ட தரிசனம்

தவ பலன்களை தரும் தேரோட்ட தரிசனம்

கோவிலில் கருவறையில் மூலவரை நன்கு அலங்காரம் செய்து, சிறப்பான நைவேத்தியம் படைத்து நறுமணப்பொருட்களால் தீப - தூப ஆராதனைகள் நடத்தப்படும் போது, நாம் நம்மையே மறைந்து இறைவனை வழிபடுவோம். கருவறை சூழல் நம்மை இறைவனிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும். இந்த புண்ணியமும், பாக்கியமும் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. நிறைய பேர் பல்வேறு காரணங்களால் அடிக்கடி ஆலயத்துக்கு செல்வதில்லை. 

சிலர் நோய் வாய்பட்டு இருப்பார்கள். சிலர் முதுமை காரணமாக வீட்டில் முடங்கி கிடப்பார்கள். இப்படிப்பட்டவர்களும் தன்னை வழிபட வேண்டும், தனது அருள் பார்வை அவர்கள் மீது பட வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் உற்சவராக தேரில் அமர்ந்து வீதிகளில் உலா வருகிறார். உற்சவர் விக்கிரகங்கள் 99 சதவீதம் உலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த விக்கிரகங்கள் கருவறை மூலவரிடம் உள்ள அதிர்வலைகளை உள்வாங்கிக் கொள்ளும் சக்தி படைத்தவை. 

எனவே இந்த சக்தியுடன் வீதி உலா வரும் உற்சவர்கள், கருவறை மூலவர் தரும் அத்தனை பலன்களையும் பக்தர்களுக்கு அள்ளிக் கொடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தேரோட்டம் நடைபெறும் போது தவிர்க்காமல் தரிசனம் செய்யுங்கள். கடுமையாக தவம் செய்பவர்கள் மீது கடவுள் இரக்கப்பட்டு, விரும்பி வேண்டி கேட்கும் வரத்தை எல்லாம் எப்படி கொடுத்து விடுவாரோ... அது போல தேரோட்டத்தை கண்டு வழிபட்டால், தவம் இருப்பவர்கள் பெறுவதற்கு சமமான பலன்களைப் பெறலாம். 

பண்டை காலத் தில் தேரோட்டம் 15 நாள், 20 நாள் வரை கூட நடக்குமாம். எனவே இதை தேர்த் திருவிழா என்றனர். தேருக்கு ரதம் என்றும் ஒரு பொருள் உண்டு. இதை அடிப்படையாகக் கொண்டு ’ரதோத் சவம்‘ என்றும் சொல்கிறார்கள். சவம் என்றால் ’வெளி வருதல்‘ என்று பொருள். (குழந்தை பிறப்பை பிரசவம் என்பார்கள்) கடவுள் ரதத்தில் வெளியில் வருவதால் ரதோத்சவம் என்கி றார்கள். ரதத்தை செலுத்த சாரதி தேவை. ஜீவாத்மாவாகிய நம்மைச் சாரதியாக இருந்து பரமாத்மா வழிநடத்துகிறார் என்பதை தேரோட்டம் உணர்த்துகிறது. 

மூலவர் இருக் கும் ஆலயம் நகராது. ஆனால் உற்சவர் இருக்கும் தேர் நகரக் கூடியது. எனவே தேரை ’நகரும் கோவில்‘ என்று ஆகமங்களில் குறிப்பிட்டுள்ளனர். கிராமங்களில் தேரோட்டம் நடை பெறும் போது முக்கிய இடங்களில் நிறுத்தி உற்சவருக்கு தீபாரதனை காட்டு வார்கள். அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் வந்து தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். இது ஒவ்வொரு தெருவிலும் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த மனநிறைவை கொடுக்கும். 

அது மட்டுமின்றி சாமியே நம் வீட்டுக்கு வந்து விட்டு செல்கிறது என்று மக்கள் மனம் குதூகலம் அடையும். இந்த மகிழ்ச்சி தேரோட்ட நாளில் மட்டுமே கிடைக்கும். இத்தகைய சிறப்புடைய தேரோட்டம் நடப்பது சங்க காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. அந்த காலத்தில் அரசர்கள் தங்களது போர்ப்படைகளாக தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என 4 விதமான படைகளை வைத்திருந்தனர். இதில் தேர்ப்படை முதல் இடத்தை வகித்தது. 

ஏனெனில் போரில் வெற்றி - தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி படைத்ததாக தேர்ப்படை இருந்தது. எனவே அரசர்கள் நகர் வலம் வரும்போது தேரில் வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். ஆலயங்கள் தோன்றிய போது கடவுளையும் தேரில் வைத்து உலா வரும் நடைமுறை உருவானது. பிறகு அதுவே தேர்த் திருவிழாவாக மாறியது என்பார்கள். சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அந்த காலத்தில் தேர்கள் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன. 

தேர்களில் நெடுந்தேர், பொன்தேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர் அணிகொள்தேர் என்று பல வகைகள் உள்ளன. தேர்கள் பொதுவாக இலுப்பை, வேங்கை, சந்தனம் ஆகிய மரங்களில்தான் செய்யப்படும். ஏனெனில் எண்ணைப் பசைத்தன்மை கொண்ட இந்த மரங்களில் விரிசல் ஏற்பட்டாலும் பிறகு அவை ஒன்று சேர்ந்து விடும் என்பதால் இவைதான் தேர்களுக்கு தேர்வு செய்யப்பட்டன. கோவில் தேர்களை செய்வதற்கு என்று விதிமுறைகள் உள்ளன. 

இது பற்றி மானசாரம், விட்டுணு தத்துவ சம்கிருதை ஆகிய நூல்களில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுவாக ஒரு தேரை செய்து முடிக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள். பெரும்பாலும் தேரின் அமைப்பானது கோவில் கருவறை விமானம் போலவே இருக்கும். சதுரம், அறுகோணம், பதின் கோணம், பன்னிரண்டு கோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் ஆகிய 9 வடிவங்களில் அமைக்கப்படும். 

தேரின் மூன்று பகுதிகளிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும் கடவுள் உருவங்கள் தவிர சிங்கம், யானை, முதலை, நாகம், அரசர்கள் உருவம் இடம் பெற்றிருக்கும். பெரும்பாலும் அந்தந்த ஆலய தல வரலாறுடன் தொடர்புடைய சிற்ப வேலைபாடுகள் தேரில் இடம்பெற்றிருக்கும். விழா நாட்களில் இந்த தேர்கள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வரும். சில கோவில்களில் பிரமாண்டமான தேர்கள் நிரந்தரமான அலங்காரத்துடன் இருக்கும். அந்த வகையில் தமிழ் நாட்டின் மிகப்பெரிய தேராக திருவாரூர் தேர் உள்ளது.

நான்கு யானை உயரத்துடன் இருக்கும் அந்த தேரை ஆழித்தேர் என்று அழைக்கிறார்கள். இந்த தேர் முழுமையாக அலங்கரிக்கப்படும் போது 96 அடி உயரம் வரை இருக்குமாம். 4 நிலைகளைக் கொண்ட இந்த தேரின் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது. தேரின் எடை 220 டன்களாகும். அந்த காலத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்தால் தான் இந்த தேர் வீதியுலா வர முடியுமாம். தற்போது திருச்சி பெல் நிறுவனத்தினர் எளிதாக உருளும் சக்கரம், ஹைட்ராலிக் பிரேக் உள்பட பல நவீன சாதனங்களை பொருத்தி இருப்பதால் 3 ஆயிரம் பேர் சேர்ந்து இழுத்து ஒரே நாளில் தேர் திருவிழாவை நடத்தி முடித்து விடுகிறார்கள். 

அந்த காலத்தில் தேரை ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து வடம் பிடித்து இழுக்க வேண்டும் என்ற பழக்கத்தை வைத்திருந்தனர். இதன் மூலம் நாட்டில் உள்ள அனைவரும், ஏழை - பணக்காரன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே இடத்தில் திரண்டு ஒன்று கூடி ஒரு வேலையை செய்யும் பொறுப்பு உருவாக்கப்பட்டது. இது அனைத்து தரப்பினரிடமும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது. எனவே தேர்த் திருவிழாவை நம் முன்னோர்கள் சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும் விழாவாகவும் பார்த்தனர். 

இறைவனின் ஐந்தொழிலில் தேர்த் திருவிழா அழித்தல் தொழிலை குறிக்கிறது. திருவதிகையில் வீற்றி ருக்கும் சிவபெருமான் முப்புரங்களையும் எரித்து தேவர்களை காப்பாற்ற தேரில் ஏறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை தலத்தில்தான் தமிழ்நாட்டின் முதல் தேரோட்டம் நடந்ததாக புராணங்களிலும், கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்த்திருவிழாவுக் காகவே பல கோவில் களுக்கு தனியாக சொத்துக்கள் இருந்தன. 

இத்தகைய சிறப்புடைய தேர்களுக்கு மலர்த் தோரணங்கள், திரைச் சீலைகள், குஞ்சங்கள் அமைத்து அலங்கரிக்கும் போது மிக அழகாக இருக்கும். அவை அசைந்து, அசைந்து வரும்போது மனம் குதூகலத்துக்கு மாறி விடும். தேர்கள் 4 ரத வீதிகளையும் சுற்றி வரும்போது நீர்மோர், பானகம், தண்ணீர் போன்றவற்றை தானம் செய்வார்கள். இந்த தானம் வம்சத்தை செழிப்புடன் விரிவடைய செய்யும் என்பது ஐதீகம். சில ஆலயங்களில் தேருக்கு முன்பு கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காவடியாட்டம், கும்மி கோலாட்டம் போன்றவை நடப்பதுண்டு. 

சில ஊர்களில் தேருக்கு பின்னால் அடியார்கள் திருமுறைகளை பாடி கொண்டு வருவார்கள். இது ஆலய விழாக்களுக்கு தனிச் சிறப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆதி தமிழர்கள் உருவாக்கிய தேர்களில் எதுவும் தமிழ்நாட்டில் இப்போது இல்லை. இப்போதுள்ள தேர்கள் விஜய நகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்டவையாகும். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டில் உள்ள பழமையான ஆலயங்களில் 866 மிகப்பழமையான தேர்களே உள்ளன. 

ஆண்டுக்கு ஓரிரு முறையே வீதியுலா வரும் இந்த தேர்கள் நன்கு பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக தேர் செய்ய மிகப்பெரும் செலவு ஆகிறது என்பதால் யாரும் தேர் செய்வதில்லை. எனவே நமது பொக்கிஷமாக ஆலய தேர்கள் மாறி உள்ளன. இந்த தேர்களை போற்றி, பேணி பாதுகாத்து வருங்கால தலைமுறையினரும் வழிபட வைக்க வேண்டியது நமது கடமையாகும். இந்த தேர்கள், வாகனங்கள் எல்லாம் ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு தடவை 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா நாட்களில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஏனெனில் பிரம்மோற்சவத்துக்கு என்று தனிச் சிறப்பும், மகிமையும் உள்ளது. 

No comments:

Post a Comment