Saturday, August 15, 2015

வெற்றியை வழங்கும் நெற்றித் திலகம்

வெற்றியை வழங்கும் நெற்றித் திலகம்

சில சடங்கு சம்பிரதாயங்கள் நம் உடலுக்கும், மனதிற்கும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. பரமேஸ்வரனுக்கு 'நெற்றிக்கண்' உண்டு என்று புராணங்கள் சொல்கின்றன. ஆனால் பக்தர்களுக்கு ஆன்மிகத்தின் சின்னமாகக் கருதப்படும் திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் திலகமிட்டுக் கொள்வது வழக்கம். 

விஞ்ஞான அடிப்படையில் பார்க்கும் பொழுது இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது என்று சொல்கிறார்கள். அதிகாலையில் குளிர்ந்த நீரில் குளிக்கும்பொழுது ஜலதோஷம் ஏற்படலாம். கபாலத்தில் (நெற்றியில்) நீர் கட்டிக் கொள்ளும். இதைப்போக்க திருநீறு அணிகின்றோம். சந்தனம், குங்குமம் இவற்றைப் புருவ மத்தியில் வைக்கும் பொழுது அதன் குளிர்ச்சி உடலில் சேர்ந்து ஆரோக்கியத்தைச் சீராக்குகிறது. துளசி, வில்வம் சேர்ந்த தீர்த்தங்களைக் கோவிலில் கொடுப்பார்கள். 

துளசி தீர்த்தம் கபம், இருமல், சளி போன்றவற்றை நீக்கும் ஆற்றல் பெற்றது. வில்வ தீர்த்தம் குளிர்ச்சியானது. நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மூலிகைகளை ஆலயங்களில் தீர்த்தத்துடன் கலந்து கொடுத்தனர் நம் முன்னோர்கள். கோவிலுக்குச் செல்லும் பொழுதெல்லாம் அங்கு தரும் பிரசாதங்கள், தீர்த்தங்களின் மூலம் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வழிவகை செய்வதோடு, இறைவனை வழிபடும் பொழுது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்று முன்னோர்கள் நம்பினர். பிரகாரம் சுற்றுவதில் கூட கால்களுக்கு வலிமை ஏற்படுகின்றது. 

கோவிலை 3 முறை, 5 முறை, 9 முறை, 51 முறை, 108 முறை என்று பிரகாரம் சுற்றுவர். சுற்றும் பொழுது இறை நாமம் உச்சரிக்க வேண்டும். இதனால் தியானமும் உருவாகின்றது. உடலில் தேங்கிய ரத்தமும் சீராகின்றது. குழந்தைகளுக்கு காது குத்திக் கடுக்கண் போடும் பொழுது கூட விஞ்ஞான உண்மை விளங்குகிறது. நூற்றுக்கணக்கான நரம்புகள் பின்னிப் பிணைந்து இருக்கும் இடம் காது. அதைக் கீழ்நோக்கி இழுத்து தோப்புக் கரணம் போடுகின்ற பொழுது மூளைக்கு ரத்தம் பம்பு செய்யப்பட்டு சிந்தனை ஆற்றலை உருவாக்குகிறது. 

மறதியைப் போக்குகிறது. இதை வெளிநாட்டில் தலைசிறந்த யோகாவாகக் கருதுகின்றனர். காது குத்திக் கடுக்கண் இடும்பொழுது, மூளை செயல்பாட்டில் பலம் கூடுவதாகக் கண்டறிந்தனர். காதுகுத்து விழாவாக முன்னோர்கள் ஏற்படுத்தி உறவைப்பலப்படுத்த மாமன் மடியில் வைத்து காது குத்துவது வழக்கம். படியேறிப் படியேறி மலைக் கோவில்களுக்குச் சென்று தெய்வ தரிசனங்களைச் செய்யும் பொழுது முழங்கால் மூட்டுக்கள் வலிமை அடைகின்றன. 

பாதரட்சை அணியாமல் கோவிலில் பிரகாரம் வரும்பொழுது ரத்த ஓட்டம் சீராகின்றது. அன்று வழிபாட்டில் செய்த பிரகாரத்தைத்தான் இன்று 'வாக்கிங்' என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆலய தரிசனத்தால் அகத்திற்கும், புறத்திற்கும் நற்பலன் கிடைக்கின்றது. நெற்றித் திருநீறும், நீங்காத குங்குமமும் சிறிய அளவில் வைத்துக் கொண்டாலும் பெரிய அளவில் பலன் தரும். நெற்றியில் வைத்துக் கொள்ளும் சந்தனத்தை மொட்டை அடித்துக் கொள்பவர்கள் தலையில் பூசிக் கொள்வர். 

இதனால் மூளை கொதிப்படையாமல் தடுக்கப்படுகின்றது. குளிர்ச்சி அதிகரிக்கும். அதே சந்தனத்தை இடுப்பிற்கு கீழே பூசக்கூடாது. இனவிருத்தி உறுப்புகளில் படும்பொழுது இன விருத்தித் திறன் பாதிக்கும் என்று தற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது உடலும் உள்ளமும் சீராகின்றது. அதே சமயம் இல்லத்திலும் திருநீற்றுப் பச்சை, துளசி, வில்வம், அருகம்புல், தூதுவளை, கரிசலாங்கன்னி, வேம்பு போன்ற தெய்வீக மூலிகைத் தாவரங்களை வளர்க்கலாம். 

அவற்றின் பயனறிந்து நாம் உபயோகப்படுத்தினால் உடல் ஆரோக்கியம் சீராகும் அல்லவா? மேலும் துளசி மாதாவை விளக்கேற்றி வழிபட்டால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வேம்பு தெய்வீக மரம். இதன் இலை, பூ ஆகியவற்றை முறைப்படி பக்குவம் அறிந்தவர்களிடம் கேட்டு உபயோகித்தால் உடல் நலம் சீராகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வாழ்வில் சுறுசுறுப்போடு வாழ தூண்டுகோலாய் அமையும்.

No comments:

Post a Comment